தேர்தலில் போட்டியிடும் நடிகர்-நடிகைகள் நடித்த திரைப்படங்களை ஒளிபரப்ப தடை : மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடும் நடிகர்-நடிகைகளின் திரைப்படங்களை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.

Update: 2019-03-20 23:30 GMT

பெங்களூரு, 

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார், ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு சுவரொட்டியை பெங்களூருவில் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்களை அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் அவர்களின் திரைப்படங்களை ஒளிபரப்ப எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் வேட்பாளர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய படங்களாக இருந்தால், அதை ஒளிபரப்ப அனுமதி கிடையாது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட வசதியாக 30 ஆயிரம் தள்ளுவண்டி நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன.

கர்நாடகத்தில் இதுவரை 1,512 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,837 சோதனை சாவடிகள் நிறுவப்பட்டு இருக்கின்றன. வாக்காளர்களுக்கு மது வினியோகிப்பதை தடுக்க 320 கலால்துறை குழுக்கள் அமைத்துள்ளோம். அதுபோல் பணம் வினியோகிப்பதை தடுக்க 180 வணிக வரி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்டதாக இதுவரை ரூ.1.56 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ரூ.21½ கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.1.47 கோடி மதிப்புள்ள இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

சிவமொக்காவில் கடந்த 19-ந் தேதி ஒரு காரில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்