மாயமானவர் பிணமாக மீட்பு, திண்டுக்கல் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 6 பேர் கோர்ட்டில் சரண்

திண்டுக்கல்லில் மாயமான ஆட்டோ டிரைவர், வாடிப்பட்டி அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். அவரை கொன்றதாக 6 பேர் பெரியகுளம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

Update: 2019-03-21 23:00 GMT
வாடிப்பட்டி, 

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 18-ந் தேதியன்று காலை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் மனைவி பிரேமா (24) பல்வேறு இடங்களில் அவரை தேடினார். இருப்பினும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மதுரை வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவு பகுதியில் உடலில் காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வாலிபர் உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணை நடத்தியபோது, இறந்து கிடந்த வாலிபர், திண்டுக்கல்லில் மாயமான ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பது தெரியவந்தது. திண்டுக்கல்லில் இருந்து கார்த்திக்கை கடத்தி சென்று ஒரு கும்பல் கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக கொலையாளிகளை திண்டுக்கல் மற்றும் வாடிப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கார்த்திக் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வி.குரும்பபட்டியை சேர்ந்த பாண்டி(33), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (25), ஜெயபாண்டி (27), மனோஜ் (30), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கருங்காப்பள்ளியை சேர்ந்த சேகர் என்ற சந்திரசேகர் (26), திண்டுக்கல் பித்தளைபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (33) ஆகிய 6 பேர் தேனி மாவட்டம் பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அருண்குமார், அவர் களை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வாடிப்பட்டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கார்த்திக், கடந்த 2015-ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பந்தல் அமைப்பாளர் கிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்