தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல், நேர்மையாக வாக்களிப்பது குறித்து மனிதசங்கிலி

தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்து கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மனிதசங்கிலி நடைபெற்றது.

Update: 2019-03-22 22:45 GMT
தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம், கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, கபடிப்போட்டி போன்றவை நடத்தப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக வாக்காளரிடம் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் இருந்து ஆற்றுப்பாலம் வரை நேற்று மனிதசங்கிலி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அனைவருக்குமான தேர்தல். கலாசார அடிப்படையில் பேராவூரணி பகுதிகளில் தேர்தல் மொய்விருந்து நிகழ்ச்சி நடத்தி, பொதுமக்களிடம் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு மொய்யாக வாக்குகளை பெற்றிடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்களிடையே பாய்மர படகுபோட்டி நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட அடுத்தமாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி தங்கள் வாக்கினை நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பு வழங்கப்படும். நேரடி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளுடன் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமரன், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், நகரமைப்பு அலுவலர் தயாநிதி, உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்