திருச்சி விமான நிலையத்தில் ரூ.15½ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15½ லட்சம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-23 23:00 GMT
திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மலேசியாவை சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் பெண் பயணிகளான மலேசியாவை சேர்ந்த நசீரா பானு, ராமநாதபுரத்தை சித்தி சமீரா ஆகிய 3 பேர் தங்க நகைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் தமீம் அன்சாரியிடம் இருந்து ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 149 கிராம் தங்க நகையையும், நசீராபானுவிடம் இருந்து ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான 158 கிராம் தங்க நகையையும், சித்தி சமீராவிடம் இருந்து ரூ.6 லட்சத்து 1,000 மதிப்பிலான 198 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 505 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பயணிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்