சிதம்பரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சிதம்பரம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-23 22:45 GMT
சிதம்பரம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதில் சிதம்பரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 21 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி அண்ணாமலை நகர், வல்லம்படுகை, சி.முட்லூர், கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 வாக்குச்சாவடி மையங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அந்தந்த மையங்களில், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது, அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்துவதற்கான வழிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின் முடிவில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முழுவதும் மடிக்கணினி மூலமாக ‘வெப் கேமரா’ கொண்டு பதிவு செய்யப்பட இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சரியான முறையில் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதியில் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசாரிடம் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் முருகேசன், அண்ணாமலை நகர் சுந்தரேசன் உள்பட போலீசார் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்