அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ- டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது

நாகூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ-டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-23 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பூதங்குடி ஆற்றங்கரை அருகே நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது36) என்பதும், ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

இதேபோல் திட்டச்சேரி கிடாமங்கலம் அருகே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்த கைகாட்டினர். அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையடுத்து டிராக்டரில் சோதனை செய்தபோது அனுமதியின்றி அரசலாற்றில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்