மத்திகிரி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலி

மத்திகிரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2019-03-23 22:15 GMT
மத்திகிரி,

அசாம் மாநிலம், கும்மி பகுதியை சேர்ந்தவர் மோனா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளி பகுதியில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்க சென்றார்.

இவருடன், அவரது மகனான பாபு (வயது 12), அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜி மகன் அஜய் (13), மகள் லட்சுமி (7) ஆகியோரையும் அழைத்து சென்றார். மீன் பிடித்து கொண்டிருந்த நேரத்தில் மோனா இயற்கை உபாதை கழிக்க குட்டையில் இருந்து சிறிது தொலைவிற்கு சென்றார். அந்த நேரம் குட்டையில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் பாபு, அஜய் மற்றும் சிறுமி லட்சுமி ஆகியோர், குட்டையில் தவறி விழுந்தனர்.

3 பேர் பலி

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த நிலையில் குட்டைக்கு வந்த மோனா, 3 பேரும் குட்டையில் விழுந்து இறந்ததை கண்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் குட்டையில் இறங்கி பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திகிரி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்