தாலுகா அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை அ.தி.மு.க. கூட்டத்துக்கு தேசிய ஊரக வேலை திட்ட பெண்களை அழைத்து சென்றதாக புகார்

அ.தி.மு.க. கூட்டத்துக்கு தேசிய ஊரக வேலை திட்ட பெண்களை அழைத்து சென்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தி.மு.க.வினர் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-26 23:15 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெண்களை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெண்களிடம் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பரமசிவம் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாததை கண்டித்து வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வீராசாமிநாதன், கவிதாபார்த்திபன் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், நகர கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை தாசில்தாருமான பாண்டியராஜனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க.வினர் தங்களது குற்றச்சாட்டை புகாராக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக பாண்டியராஜன் கூறினார்.

இதையடுத்து அவர்கள் புகார் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்