செய்யாறு அருகே நிலத்தில் மேய்ந்த 8 மாடுகள் திடீர் சாவு

செய்யாறு அருகே நிலத்தில் மேய்ந்த 8 மாடுகள் திடீரென பரிதாபமாக இறந்தது. 5 மாடுகள் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Update: 2019-03-31 22:15 GMT
செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஷேக் உசேன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு கோழிப்பண்ணையுடன் சுற்றியுள்ள பகுதியில் நெல் பயிரிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் உசேன் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருந்த நெல்லை அறுவடை செய்துள்ளார். அறுவடை செய்த பிறகு அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கறவை மாடுகளை வயலுக்கு ஒட்டிய இடத்தில் கயிற்றினால் கட்டி வைத்தனர். கயிறு எட்டிய தூரம் வரை அறுவடை செய்த நிலத்தின் வரப்பில் இருந்த புல்கள் மற்றும் நிலத்தில் இருந்த வைக்கோல்களை மாடுகள் மேய்ந்துள்ளது.

பகல் 11 மணியளவில் மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்தபோது மாடுகள் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டும், வாயில் நுரையுடன் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தண்டரை கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் வந்து பார்ப்பதற்குள் 3 மாடுகள் நடக்க முடியாமல் கீழே விழுந்து இறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தங்களுடைய மாடுகளை வீட்டிற்கு அவசர, அவசரமாக ஓட்டி வந்து நாட்டு வைத்தியத்தை மேற்கொண்டனர். ஆனாலும் மாடுகளின் உரிமையாளர்கள் கண் முன்னே சில மாடுகள் துடிக்க துடிக்க பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த அவர்கள் கதறி அழுதனர்.

இதில் பரசுராமன் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள், மணி என்பவரின் 2 மாடுகள், சங்கர் என்பவரின் ஒரு மாடு, மற்றொரு சங்கரின் ஒரு மாடு உள்ளிட்ட 8 மாடுகள் பரிதாபமாக இறந்தது.

மேலும் 5 மாடுகள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளர்கள் மாட்டின் அருகிலேயே சோகமாக அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். 8 மாடுகள் இறந்ததால் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாடுகள் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்