புதினின் முட்டாள்தனம்... அமெரிக்காவால் மட்டுமே முடியும் - ஜெலன்ஸ்கி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ரஷியாவை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.;
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரானது 3 ஆண்டுகளை கடந்து 4-ம் ஆண்டை நோக்கி செல்கிறது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷிய போரை ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இன்று கூறும்போது, கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை ரஷியா, தினமும் ஆயிரம் பேருக்கு குறையாமல் போரில் வீரர்களை இழந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வராமல் ரஷியா நீட்டிப்பதன் பலனாக இது நடக்கிறது. இது முட்டாள்தனம். இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தடுக்க முடியும் என கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த போரானது, முட்டாள் மனிதர்களிடம் இருந்து உலகம் தன்னை பாதுகாக்க முடிவில்லை என்றே நினைவூட்டுகிறது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். ரஷியா தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். உக்ரைன் மக்களுக்கு பாதுகாப்பாக, உதவியாக மற்றும் அவர்களை மீட்பதற்காக உள்ள ஒவ்வொருவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்து கொண்டார்.