திருச்சுழி அருகே விவசாயி வெட்டிக்கொலை: சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சுழி அருகே பொதுக் கிணற்றுப் பிரச்சினையில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 3 பேருக்கு விருதுநகர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Update: 2019-04-01 23:00 GMT

விருதுநகர்,

திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதன் (வயது 62). இவரது தம்பி இருளன் (60). இவர்கள் இருவருக்கும் இடையே பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த 28.8.2009 அன்று மருதன் கிணற்றுக்கு சென்று கொண்டிருந்தபோது இருளனும், அவரது மகன்கள் மதுரைவீரன் (49), அமிர்தராஜ்(35), பாக்கியராஜ் (34) ஆகியோரும் மருதனை வழிமறித்தனர்.

இருளன் மருதனை மண்வெட்டிக் கணையால் தாக்கினார். தடுமாறி கீழே விழுந்த மருதனை மற்ற 3 பேரும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த மருதனின் மற்றொரு தம்பி சண்முகம், மருமகள் நாகஜோதி ஆகிய 2 பேரையும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டினர்.

இது தொடர்பாக மருதனின் மகன் மதுரைவீரன் (29) கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் இருளன், அவரது மகன்கள் மதுரைவீரன், அமிர்தராஜ், பாக்கியராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது இருளன் இறந்து விட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமளா குற்றம் சாட்டப்பட்ட மதுரைவீரன், அமிர்தராஜ், பாக்கியராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்