பொள்ளாச்சி குமரன் நகரில், தனியார் குடோனில் தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்

பொள்ளாச்சி குமரன் நகரில் தனியார் குடோனில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

Update: 2019-04-01 22:44 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவருக்கு சொந்தமான சீமார் (துடைப்பம்) தயாரிக்கும் தொழிற்சாலை அந்த பகுதியில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சீமார் குஜராத், பெங்களூரு உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று சீமார் இருப்பு வைத்திருந்த குடோனில் தீப்பிடிக்க தொடங்கியது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. மேலும் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் குடோனில் ஒரு பகுதியில் இருந்த தகரத்தை பிரித்து எடுத்தனர்.

அதன்பிறகு புகைமூட்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதற்கிடையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். அதை தொடர்ந்து உடுமலையில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்து போனதால், தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பிடித்த தீயை நேற்று காலை 11 மணிக்கு தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 150 டன் சீமார் நாசமானது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்