சுண்டிகொப்பா அருகே தாய் கண்முன்னே குட்டையில் மூழ்கி சிறுமி சாவு நாயை குளிப்பாட்ட சென்றபோது பரிதாபம்

சுண்டிகொப்பா அருகே தாய் கண்முன்னே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாள். அவள் நாயை குளிப்பாட்ட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-04-02 23:00 GMT
குடகு,

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே திரங்காலா கிராமத்தை சேர்ந்தவர் சோமா. காபி தோட்ட தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள் பாரதி (வயது 14). இவள் குசால்நகரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் சோமா கடந்த சில தினங்களுக்கு முன்பு சுண்டிகொப்பா அருகே ஒசக்கோட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்பவரின் காபி தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதனால் அவர், தனது குடும்பத்துடன் ஒசக்கோட்டை பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சோமா சுண்டிகொப்பாவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார். மீனாட்சியும், பாரதியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.

அப்போது பாரதி, தான் வளர்த்து வரும் நாயை காபி தோட்டத்தில் உள்ள குட்டையில் குளிப்பாட்ட அழைத்து சென்றாள். அப்போது நாய் அங்கிருந்து ஓடியது. நாயை பிடிக்க பாரதி வேகமாக சென்றாள். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கால் தவறி அவள் குட்டையில் விழுந்தாள். இதில் பாரதி, தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தாள்.

தனது எஜமானி தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த அந்த நாய், பலமாக குரைத்தது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் மீனாட்சியும், அக்கம்பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்தவர்களும் விரைந்து வந்தனர். அப்போது பாரதி தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், பாரதியை மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் பாரதி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள். தனது கண்முன்னே பாரதி நீரில் மூழ்கி பலியாவதை பார்த்து மீனாட்சி கதறி அழுதார். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், சுண்டிகொப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நாயை குளிப்பாட்ட சென்றபோது, பாரதி குட்டையில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சுண்டிகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் செய்திகள்