பாம்பன் பாலம் பராமரிப்பு பணியின் போது ரூ.74¾ லட்சம் செலவில் பயணிகளுக்கு பஸ் ஏற்பாடு மதுரை கோட்ட ரெயில்வேக்கு பாராட்டு

ராமேசுவரம் பாம்பன் பாலம் பராமரிப்பு பணிகள் நடந்த போது, ரூ.74¾ லட்சம் செலவில் பஸ்கள் மூலம் பயணிகளை அழைத்துச்சென்றதற்காக மதுரை கோட்ட ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2019-04-02 22:54 GMT

மதுரை,

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி 3 பாசஞ்சர் ரெயில்களும், திருச்சிக்கு 2 பாசஞ்சர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கன்னியாகுமரிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலும், சென்னைக்கு 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், திருப்பதிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு ஒரு ரெயிலும், உத்தரபிரதேச மாநிலம் பைசாபாதுக்கு ஒரு ரெயிலும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு ஒரு ரெயிலும், குஜராத் மாநிலம் மண்டூதியாவுக்கு ஒரு ரெயிலும் என நிறைய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே பாலம் வலுவிழந்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்காக ரெயில்கள் கடந்த டிசம்பர் மாதம் 4–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை மானாமதுரை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்துக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு பயணிகள் வருவதால், மாற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. 4 மாதத்துக்கு முன்பே ராமேசுவரத்துக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிரமப்படக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா உத்தரவுப்படி, பாம்பன் பாலம் மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் ரெயில்நிலையங்களில் இருந்து பஸ்கள் மூலம் ராமேசுவரத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. செலவை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

அதன்படி, மானாமதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு மேற்கண்ட காலக்கட்டத்தில், 2,914 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 252 பயணிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.54 லட்சம் செலவானது. மறுமார்க்கத்தில், ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் மற்றும் மானாமதுரைக்கு 1,338 பஸ்களில் 69 ஆயிரத்து 528 பயணிகள் அழைத்து வரப்பட்டனர். இதற்காக ரூ.20 லட்சத்து 85 ஆயிரம் செலவாகியுள்ளது.

ஆக மொத்தம் பஸ்கள் மூலம் பயணிகளை அழைத்துச்சென்ற வகையில் மதுரை கோட்ட ரெயில்வேக்கு ரூ.74 லட்சத்து 85 ஆயிரம் செலவாகியுள்ளது. மதுரை கோட்ட ரெயில்வேயின் இந்த ஏற்பாட்டுக்கு ரெயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் வர்த்தக மேலாளர் பரத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்