வேலூர் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசனத்துக்கு மாறும் விவசாயிகள்

வேலூர் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்க விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறி வருகிறார்கள். இதற்காக ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-03 22:45 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைக்கு அடுத்து, விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பாலாற்றை நம்பி பெரும்பாலான விவசாயிகள், விவசாயம் செய்து வந்தனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டியதன் காரணமாக பாலாறு வறண்டு விட்டது. அதோடு பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளை காரணமாக நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து விட்டது. இதனால் பாலாற்றை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலாற்றில் மழை காலத்தில் காட்டாற்று வெள்ளம் மட்டுமே செல்கிறது. அதுவும் தேக்கி வைக்கப்படாமல் வீணாகி விடுகிறது. இதனால் தண்ணீரின்றி விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. வேலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவு தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யவதற்கு வசதியாக விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடனும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியை சமாளிக்க விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்திற்காக 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 87 ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தர வேண்டி 8 ஆயிரம் விவசாயிகள் வேளாண்மை துறையில் பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி அமைத்து கொடுக்க ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 2,700 விவசாயிகளுக்கு 2321 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு படிப்படியாக மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்