திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி - தி.க.வினர் இடையே பயங்கர மோதல்

திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி-தி.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டதில் தி.க.வை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2019-04-04 23:00 GMT
திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக வீரமணி மேடைக்கு வருவதற்கு முன்பு மாநில நிர்வாகி அறிவுக்கரசு பேசி கொண்டு இருந்தார். அப்போது அவர், ராதை- கிருஷ்ணன் உறவுமுறை பற்றி பேசினார். இதனை கேட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். மேடை மீது செருப்பையும், கற்களையும் வீசினார்கள்.

உடனே மேடையில் இருந்த சிலர் நாற்காலியை தூக்கி அவர்கள் மீது வீசினர். பதிலுக்கு இந்து முன்னணியினரும் நாற்காலி மற்றும் கற்களை வீசினர். இதில் அங்கு நின்ற தி.க.வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து இந்து முன்னணியை சேர்ந்த 12 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது. இதையடுத்து சிறிதுநேரத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேடைக்கு வந்து பேசினார். பின்னர் அவர் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு அங்கிருந்து வேனில் ஏறி புறப்பட்டார்.

அவரது வேன் கீரைக்கடை பஜாரில் இருந்து புறப்பட்டு இ.பி.ரோட்டில் திரும்பியபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இந்து முன்னணியை சேர்ந்தவர்களுக்கும், தி.க.வினருக்கும் இடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த மோதல் பற்றி அறிந்ததும் மேடை அருகே நின்று கொண்டு இருந்த தி.க.வினர் ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதுமே கலவரம்போல் காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் ‘லத்தி’யுடன் வந்து கூட்டத்தை கலைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் நிஷா மற்றும் உதவி கமிஷனர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்து முன்னணியை சேர்ந்த 12 பேரை காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்ததை கண்டித்து, இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் போலீஸ் நிலைய கேட்டை இழுத்து பூட்டினர். இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டபடி ஏராளமானோர் நின்றனர். அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காந்திமார்க்கெட் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 

மேலும் செய்திகள்