அகரம்சேரி அருகே பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அகரம்சேரி அருகே மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-05 22:45 GMT

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா அகரம்சேரியை அடுத்த எஸ்.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி ஜானகியம்மள் (வயது 83). இவர்களுக்கு மோகன், அன்பு, அரிதாஸ், வஜ்ஜிரம், ஆறுமுகம் என 5 மகன்களும், செல்வராணி, பவானி என 2 மகள்களும் உள்ளனர். கணபதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அரிதாஸ் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். ஆறுமுகம், வஜ்ஜிரம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் விவசாய நிலம் அகரம்சேரி ஏரிக்கரையில் உள்ளது. நிலத்தில் உள்ள வீட்டில் ஜானகியம்மாள் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு பால் கறப்பதற்காக ஆறுமுகம், வஜ்ஜிரம் ஆகியோர் நிலத்திற்கு சென்றனர். அப்போது வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

மேலும் அங்கு ஜானகியம்மாள் இல்லாததால் வஜ்ஜிரமும், ஆறுமுகமும் அந்த பகுதியில் தேடிச் சென்றனர். அப்போது தென்னை கீற்றின் நடுவில் ஜானகியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளிகொ£ண்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து வேலூரில் இருந்து மோப்ப நாய் ‘சிம்பா’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவு ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஜானகியம்மாளிடம் நகை இருந்துள்ளது. வெளியில் செல்லும் போது மட்டும் நகை அணிந்து செல்வதும், மற்ற நேரங்களில் கவரிங் நகையும் அணிந்து இருப்பார். மர்ம நபர்கள் 5 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு ஜானகியம்மாளை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்’ என்றனர்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்