திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-05 22:45 GMT
திருத்தணி,

திருத்தணியில் உள்ள சோளிங்கர் சாலையில் கே.கே.நகர் ராஜீவ்காந்திநகர், குண்டலூர் சாயிபாபாநகர் போன்ற பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

இதைத்தொடர்ந்து அவர் கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருத்தணி நகராட்சியை கண்டித்து நேற்று காலை காலிகுடங்களுடன் திருத்தணி-சோளிங்கர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த திருத்தணி போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் முறையாக வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் தங்களுடன் திருத்தணி நகராட்சி அலுவலர்கள் வந்து பேசவேண்டும் என கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து திருத்தணி நகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி உடனடியாக டிராக்டர்களில் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படும் என்றும் அடுத்த புதன் கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்