மதுக்கடையை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: பொதுமக்களுடன் அதிகாரிகள் ஆலோசனை

டாஸ்மாக் மதுக்கடை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் பொதுமக்களுடன் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-08 23:15 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் ஜோகிமடம் மேல்ஆலத்தூர் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இப்பகுதி பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் முக்கிய வழியாக உள்ளது. இந்த மதுக்கடைக்கு வந்து செல்லும் குடிமகன்களால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் அதனை அகற்றக்கோரி மனு அளித்தனர். இருப்பினும் அந்த மதுக்கடை தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மீனாட்சியம்மன் நகர், தங்கம் நகர், வி.ஐ.பி. நகர், ஜோகிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து சமூக வளையதளத்தில் தகவல் பரவியது. இதுதொடர்பான செய்தி நேற்று ‘தினத்தந்தி’யில் வெளியானது.

அதைத் தொடர்ந்து நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரும், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலருமான வசந்தராஜன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பங்கு பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தாசில்தார் சாந்தி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்