அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு திராவிடர் கழகத்தினர் மறியல்

அறந்தாங்கியில் பெரியார் சிலை நேற்று உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-08 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகே 1998-ம் ஆண்டு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் பெரியார் சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து திராவிடர் கட்சியினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் யோகராஜ் என்பவர் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே மண்டல தலைவர் ராஜன் தலைமையில், திராவிடர் கழகத்தினர் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் அங்கு வந்த மெய்யநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கட்சியினர் உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் அருகே அமர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சிலையை உடைத்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்படும். வருவாய்த்துறை சார்பில் சேதம் அடைந்த சிலையை சீரமைத்து கொடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் இதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்று கூறி அங்கேயே அனைவரும் நின்றனர்.

இதையடுத்து தாசில்தார் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிலையை உடைத்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முத்து உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பெரியார் சிலையை சீரமைக்கும் பணியை வருவாய்த்துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்