செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2019-04-08 22:15 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி, (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கட்டிட பணியின்போது வலது பக்க இடுப்பில் அடிபட்டு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதற்கான இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை லட்சுமி ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரியில் செய்தும், அது பலனளிக்காததால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து மார்ச் மாதம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக டாக்டர்கள் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டு, முதல்வர் உஷா சதாசிவன் மேற்பார்வையில், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் துறைத்தலைவர் மனோகரன் தலைமையில் மருத்துவர்கள் அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று மறுஅறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர். அறுவை சிகிச்சை செய்த மாலையே அவர் நடக்க ஆரம்பித்து விட்டார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இடுப்பு மாற்று மறுஅறுவை சிகிச்சை மருத்துவச்செலவு ரூ.4 லட்சமாக இருந்தாலும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்