மேல்மலையனூர் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-09 22:30 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே எய்யல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து எய்யல் ஊராட்சி அலுவலகம் மற்றும் மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மீண்டும் அதிகாரிகளை சந்தித்து தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நேற்று வரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுக்கள் சேத்பட்-அவலூர்பேட்டை சாலையில் மேல்செவலாம்பாடி கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளள்ச்சி அலுவலர் சீனிவாசன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதுராஜ், அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவவர் குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் நாளை(அதாவது இன்று) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்