வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வாணியம்பாடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-12 22:00 GMT

வாணியம்பாடி, 

வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நன்னேரி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களாக ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெண்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடங்களில் குடிநீரை சுமந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தேர்தலுக்கு முன் குடிநீர் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசார் மற்றும் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அவர்கள், அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்