திருச்சியில் கண்டெய்னர் லாரியில் சோதனை: ரூ.7½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு

திருச்சியில் கண்டெய்னர் லாரியில் நடத்திய சோதனையில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-12 23:00 GMT
திருச்சி, 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை அருகே நேற்று காலை பறக்கும்படை தாசில்தார் ரேணுகா, காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே அந்த கண்டெய்னர் லாரியை காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே கண்டெய்னர் லாரியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கட்டு, கட்டாக கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் அந்த பகுதியினர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது போலீசார் கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர்.

அதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. மொத்தம் 50 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பணம் இருப்பதாக பரவிய தகவல் வெறும் வதந்தி என தெரியவந்தது. உடனே அனைவரும் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த டிரைவர் திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த காளிதாசிடம்(வயது 35) விசாரித்தனர். அப்போது அவர் ஓசூரில் இருந்து லாரியை ஓட்டி வருவதாகவும், திருச்சி வந்ததும் ஒருவரிடம் லாரியை ஒப்படைக்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக காந்திமார்க்கெட் போலீசார், டிரைவர் காளிதாஸ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, காளிதாசை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். திருச்சியில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்