அரசியல் கட்சியினர் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும், கலெக்டர் சி.கதிரவன் தகவல்

அரசியல் கட்சியினர், அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-04-14 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவானது வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் காட்சி ஊடகம், ரேடியோ (எப்.எம். பண்பலை அலைவரிசைகள்) மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் சான்று பெற்ற பின்னரே விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குப்பதிவு நடைபெறும் முந்தைய நாளான நாளை மறுநாளும் (புதன்கிழமை), வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 18–ந் தேதியும், அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களே, தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

மேலும் அச்சு ஊடகங்களும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தை நாளும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதி செய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்