இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரசும், தி.மு.க.வும் செய்தது வரலாற்றுப்பிழை ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரசும் தி.மு.க.வும் வரலாற்றுப்பிழை செய்தன என்று மதுரை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

Update: 2019-04-14 23:00 GMT

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை ஜீவாநகர், தெற்குவாசல், கீழவாசல், முனிச்சாலை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் தங்களது கூட்டணியை வெற்றி பெற வைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இதற்காக அவர் கலர், கலராக சட்டை அணிந்து வீதிகளிலும், வயல்வெளிகளிலும் செல்கிறார். டீக்கடைக்கு சென்று டீ குடிக்கிறார். இதெல்லாம் செய்தால் அவர் முதல்–அமைச்சர் ஆகிவிடலாம் என்று எண்ணுகிறார். ஆனால் நாங்கள் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து மக்களுடன், மக்களாக, தொண்டர்களுடன் தொண்டர்களாக இருக்கிறோம். நம்மிடம் மு.க.ஸ்டாலின் பாச்சா பலிக்காது. அவர் டீக்கடைக்கு சென்று டீ தான் குடிப்பார். நாம் டீக்கடையே நடத்தி இருக்கிறோம்.

பிரியாணி சாப்பிட்டால் கடைக்காரரிடம் காசு கொடுப்பதில்லை. பியூட்டி பார்லர் நடத்துபவர்களிடம் மாமூல் கேட்கிறார்கள். அவர்கள் வன்முறை கலாசாரத்தை இன்னும் கைவிடவில்லை.

ஏழை பெண்கள் நாள் முழுவதும் உழைக்கிறார்கள் என்று எண்ணிய ஜெயலலிதா, அவர்களுக்கு இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் என வீட்டு உபயோகப்பொருட்களை வழங்கினார். ஜெயலலிதா, தெய்வமாக இருந்து இங்கு நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த திட்டத்தை முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை நாங்கள் பயந்து பயந்து செய்து வருகிறோம்.

தி.மு.க.–காங்கிரஸ் ஆட்சியின்போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த தடையை விலக்க வலியுறுத்தி, உலகம் முழுவதும் போராட்டம் நடந்தபோது, நான் பிரதமர் மோடியிடம் சென்று பேசினேன். தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒரே நாளில் 4 துறைகளிடம் ஜல்லிக்கட்டுக்காக அனுமதி பெற்றுத்தந்தவர் மோடி. ரூ.1,500 கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டியவர் மோடி.

காங்கிரஸ் ஆட்சி 10 ஆண்டுகள் நடந்தது. அந்த சமயத்தில் தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் அவர்களும், தி.மு.க.வினரும் கொண்டு வரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையில் மிகப்பெரிய வரலாற்றுப்பிழையை தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி செய்தது. அங்கு 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை செய்தது ராஜபக்சே. அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் தான் எஜமானர்கள். நீதிபதிகள். யார் நல்லாட்சி தருபவர்கள் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்