பா.ஜனதாவின் பாசிச கொள்கையை அ.தி.மு.க. ஆதரிக்கிறது - கோவையில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் பாசிச கொள்கையை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்று கோவையில் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-14 22:00 GMT
சிங்காநல்லூர்,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நடந்தது. இதில் அந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்கள் அழிந்து விட்டன. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து விட்டனர்.

அதுபோன்று விவசாயிகள் விளைச்சல் செய்யும் பயிருக்கு எவ்வளவு செலவு செய்தார்களோ, அதில் 50 சதவீதத்தை கூட்டி 150 சதவீதம் ஆதார விலை வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் பலர் கடனில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்படும் என்று கூறி உள்ளார். இந்த தொகையை அறிவித்ததன் மூலம் தான் தோல்வி அடைந்துவிட்டேன் என்பதை அவர் ஏற்றுக்கொண்டதுதான்.

தனது 5 ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல்கூட நடக்கவில்லை என்று மோடி சாதனையாக கூறி வருகிறார். அதைவிட பொய் வேறு எதுவும் இல்லை. இந்த ஆட்சியில் செய்த ஊழல் குறித்து பல்வேறு விவரங்கள் அம்பலமாகி வருகின்றன. அதில் மிகப்பெரிய ஊழலாக மக்களிடம் விவாதிக்கப்படுவது ரபேல் ஆகும். இதில் மோடியே நேரடியாக தலையிட்டு பிரான்ஸ் அரசிடம் பேசி தனது நண்பர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தை வாங்கிக்கொடுத்தார் என்பது வெளியே வந்து உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் சென்றுவிடக்கூடாது என மோடியே நேரடியாக தலையிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் சிறு அனுபவம் கூட இல்லாத அனில் அம்பானிக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம் உருவாக்கும் விதத்தில் மோடி செயல்பட்டு உள்ளார். இதைவிட கேவலமான ஊழல் ஏதாவது இருக்க முடியுமா?.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தோல்வி அடையாமல் செய்த சாதனை என்று கூற வேண்டும் என்றால் அது மதக்கலவரத்தை ஏற்படுத்தி மக்களை அழித்ததுதான். மதத்தின் பெயரில் மக்களை பிரித்தது, மதசார்பின்மையை கூண்டோடு அழித்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்ற பாசிச குறிக்கோளை அமலாக்க முயற்சி செய்து வருகிறார். தமிழகத்தில் தமிழை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தி, சமஸ்கிருத மொழியை நுழைக்க முயற்சி செய்து வருகிறார்.

மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்துவிட்டு நாடு முழுவதும் ஒரே தலைவன், அது மோடிதான் என்ற பிம்பத்தை உருவாக்க பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த பாசிச கொள்கைக்கு அ.தி.மு.க. அரசும் ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழகத்தின் மொழி, உரிமை, மாண்புகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தாமல் அவர்களிடம் அடிமையாகிவிட்ட அ.தி.மு.க. வேடிக்கைதான் பார்க்கிறது. எனவே மத்தியில் மோடியையும், மாநிலத்தில் எடப்பாடியையும் வீழ்த்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. அதை நீங்கள் அனைவரும் செய்ய முன்வந்து, தமிழகத்தில் 40-க்கும் 40 என்ற மகத்தான வெற்றியை தேடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் எம்.எல்.ஏ., காங்கிரசை சேர்ந்த கணபதி சிவக்குமார், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், எஸ்.பி.வெள்ளியங்கிரி, பயனீயர் தியாகு மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்