மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது - இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா பேச்சு

மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

Update: 2019-04-14 22:30 GMT
வடவள்ளி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கோவை பாப்பநாயக்கன்புதூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மக்களுக்கு இனிதான் நல்ல நாள் தொடங்க போகிறது. ஜனநாயகம் இருக்குமா? அழிந்து போகுமா என்ற அச்சம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க அரசியல் கட்சி என்றாலும் அதை ஆட்டு விப்பது ஆர்.எஸ்.எஸ். மதசார்பற்ற ஜனநாயகத்தையும், அனைவரும் பெறுவதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டதில்லை. மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது.

மோடி, ஆட்சியில் இருப்பதன் நோக்கமே இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு மதவாதத்தை அடிப்படையாக கொண்டு மனுதர்ம சட்டத்தை செயல்படுத்துவதற்காக தான். அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து இந்தியா மதவாத நாடாக மாறவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. இந்துராஷ்டிரா என்று இவர்கள் பேசுவது உண்மையாகிவிட்டால் அதைவிட பேரிடர் எதுவும் இருக்க முடியாது என சொன்னவர் அம்பேத்கர்.

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. பா.ஜ.க.வின் 5 ஆண்டு ஆட்சியில் இதுதான் நடந்து இருக்கிறது. பிரதமர் குறித்து கேள்வி கேட்டால் தேச விரோதிகள், நக்சலைட்டுகள் என்று சொல்கின்றனர். ஒரு சதவீத செல்வந்தர்கள் 53 சதவீத சொத்துகளை வைத்திருக்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கிறது. பாதுகாப்பு துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் யாருமில்லாமல் மோடி, ரபேல் பேரத்தை நேரடியாக நடத்தி முடித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூர் உட்பட நாடு முழுவதும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகிய இரண்டும் அகற்றப்பட வேண்டும். ஜெயலலிதா பின்பற்றிய கொள்கைகளை எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருப்பவர்களும் பின்பற்றவில்லை. அதிகாரத்தை தக்க வைக்க மோடியின் காலில் விழுந்து கிடக்கும் எடுபிடி அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இடைதேர்தல்களில் அ.தி.மு.க. அடையும் தோல்வி எடப்பாடி அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் மக்களுக்கான நல்லாட்சி அமைய வேண்டும் என்பதில் மக்கள் தீவிரமாக உள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணியினர் எதிர்அணியினர் மீது அவதூறு செய்கின்றனர். பாதுகாப்பையும், பாகிஸ்தானையும் குறிவைத்து ஒரு பீதியை மக்களிடத்தில் வைத்து வாக்குகளை சேகரிக்கின்றனர்.

மோடி செய்ததை வைத்து வாக்குகளை சேகரிக்க முடியவில்லை. அவர் செய்தது எல்லாம் மோசடி மட்டுமே, அதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும். அதை மக்கள் உணர்ந்து ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தலில் பணம் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிரணியாக யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது வருமான வரி சோதனையை நடத்துகிறார்கள்.

தேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசு சரியாக செயல்பட வில்லை.

அயோத்தி பிரச்சினை, சபரிமலை பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. ஆனால் தீர்ப்பை எதிர்பார்த்து பேசுவது போல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசுகின்றனர். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்