பாண்டுப்பில், போலி கால்சென்டர் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த 8 பேர் கைது

பாண்டுப்பில் போலி கால்சென்டர் நடத்தி 100 பேரிடம் இருந்து ரூ.1 கோடி மோசடி செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-14 21:45 GMT
மும்பை,

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் சட்டவிரோதமாக கால்சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த வணிக வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அங்கு சட்டவிரோதமாக போலி கால் சென்டர்கள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 மடிக்கணினிகள், 20 செல்போன்கள், ஏராளமான சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி கால் சென்டர் நடத்தி வந்த ரோகித் பர்டே (வயது28), பிரசாந்த் கோட்டியன் (28), நிலேஷ் (31), பிரவின் நிம்பல்கர் (28), ராகுல் (26), விக்ராந்த் (29), பரேஷ் (34), சுமித் சாவ்ந்த் (24) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், போலி கால்சென்டர் மூலம் அவர்கள் 100 பேரிடம் இருந்து ரூ.1 கோடி அளவில் மோசடி செய்ததும், அந்த பணத்தை டெல்லி, காஜியாபாத், நொய்டா போன்ற இடங்களில் உள்ள 30 வங்கி கணக்குகளில் போட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்