கூட்டணி அரசு 20 சதவீதம் கமிஷன் பெறுவதாக பொய் பேசி மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி முயற்சி, முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

கூட்டணி அரசு 20 சதவீதம் கமிஷன் பெறுவதாக பொய் பேசி மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி முயற்சிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-14 22:30 GMT
பெங்களூரு,

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று காலையில் முதல்-மந்திரி குமாரசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கர்நாடகத்தில் கூட்டணி அரசு 20 சதவீத கமிஷன் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு கூறி இருப்பது குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கமிஷன் பெற்று பழகியவராக இருக்கலாம். அதனால் அடிக்கடி கமிஷன் பற்றியே பேசுகிறார். கர்நாடகத்தில் கூட்டணி அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அரசை குறை சொல்ல பிரதமர் மோடியால் முடியவில்லை. அதனால் தான் கூட்டணி அரசு கமிஷன் பெறுவதாக பொய் பேசி வருகிறார்.

மோடியை போன்று எனக்கு பொய் பேச தெரியாது. அவரது மட்டத்திற்கு நானும் கீழ் இறங்கி பேச விரும்பவில்லை. கூட்டணி அரசு கமிஷன் பெறுவதாக பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்ப பிரதமர் முயற்சிக்கிறார். அதற்காக கர்நாடகத்திற்கு வரும் போதெல்லாம் கூட்டணி அரசு கமிஷன் பெறுவதாக பொய் பேசுகிறார். இதனை கர்நாடக மக்கள் நம்ப மாட்டார்கள்.

வருமான வரித்துறை சோதனையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமே குறி வைத்து சோதனை நடத்துவதை கண்டித்து தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். தேவேகவுடாவை யாராவது ஒருவர் சந்தித்து பேசினால், உடனே அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி விடுகின்றனர்.

வருமான வரித்துறை சோதனைக்கு நான் பயப்படபோவதில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. எந்த ஒரு விசாரணைக்கும் தயாராக உள்ளேன். நரேந்திர மோடியிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சித்ரதுர்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. அந்த பெட்டியை எதற்காக காரில் வைத்து எடுத்து சென்றனர் என்பது பற்றியும் தெரியவில்லை. அதுபற்றி தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமரை போல, இதுபோன்ற செயல்களில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன்.

முதல்-மந்திரி பதவியில் நான் ஒரு பொம்மை போல இருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் தான் ரிமோட் மூலம் என்னை இயக்குவதாகவும் பிரதமர் சொல்கிறார். நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என்னை யாரும் இயக்கவும் இல்லை. யாருடைய சொல்லை கேட்டும் நான் ஆட்சி நடத்தவில்லை. இதனை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்