பாரதீய ஜனதா பிரமுகர் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக கூறி சாலை மறியல் போராட்டம்

வேளாங்கண்ணி அருகே பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2019-04-15 23:00 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). இவர், பாரதீய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். நேற்று காலை திருப்பூண்டி அருகே உள்ள கீரைநேரி ஏரி கரையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்த தகவல் அறிந்து தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர், திருப்பூண்டி கடைத்தெரு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செந்தில்குமாரை யாரோ கொலை செய்துள்ளனர் என்றும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூண்டி–நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த செந்தில்குமாருக்கு உமாராணி என்ற மனைவியும், அனுசுயா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்