தார்டுதேவ் பகுதியில் வியாபாரி காரில் ரூ.50 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

மும்பை தார்டுதேவ் பகுதியில் வியாபாரி காரில் இருந்து ரூ.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-15 23:00 GMT
மும்பை,

மும்பையில் வருகிற 29-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் முக்கிய சாலைகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படையினர் மும்பை தார்டுதேவ் பகுதியில் தீவிரமாக வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அந்த காரில் ரூ.50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் குறித்து காரில் இருந்த வியாபாரியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது அவர் பொருட்கள் வாங்கியதற்காக வேறு ஒரு வியாபாரிக்கு கொடுக்க கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்