மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் கி.வீரமணி பேட்டி

மத்தியிலும், மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

Update: 2019-04-15 23:00 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கியில் உள்ள பெரியார் சிலையை கடந்த 1998-ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையின் தலை பகுதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த சிலை வருவாய் துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அறந்தாங்கிக்கு வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தேர்தல் தோல்வி பயத்தில் இது மாதிரியான செயல்களை செய்து வருகின்றனர். அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு உணர்வு பூர்வமாக வந்து அமைதியாக போராட்டம் நடத்திய கட்சியினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது. அறந்தாங்கியில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை உடனடியாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால் சிலை உடைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. போலீசார் கைகள் கட்டப்பட்டு உள்ளதா என்று தெரியவில்லை. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் நல்ல முறையில் நடைபெற வேண்டும். பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை விரைவில் போலீசார் பிடிக்கவில்லை என்றால் கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அறப்போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்