தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2024-04-30 13:46 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக ஊட்டியை சொல்ல முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வழக்கமாக கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளுக்கு செல்வார்கள்.

அங்கு வெப்பம் ஓரளவுக்கு குறைந்திருக்கும் என்பதால் பலரும் பயணிக்கின்றனர். ஆனால் அங்கும் கூட எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த பகுதியிலேயே அப்படி என்றால், பொதுவாக வாட்டி வதைக்கக் கூடிய தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய வட உள் மாவட்டங்களுக்கு மேலும் 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 5 டிகிரி பாரன்ஹீட் முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வட உள்மாவட்டங்களில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது, 110 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் எனவும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்