வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலி: திருப்பூரில் சலவை ஆலைக்கு சீல் வைப்பு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடி

வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து திருப்பூர் சலவை ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2019-04-15 22:30 GMT

வீரபாண்டி,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற பெயரில் சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இங்கு சலவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து வைக்க 3 தொட்டிகள் உள்ளன. அதில் ஒரு தொட்டியில் நேற்று முன்தினம் அடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்களான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசேன் பார்புயா(வயது 26), இவருடைய தம்பி தில்வார் உசேன் பார்புயா(21), அன்வர் உசேன்(20), அபிதுர்ரகுமான்(20) உள்ளிட்ட 7 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கினார்கள். 10 அடி ஆழம் உள்ள தொட்டியில் 4 அடி உயரத்துக்கு சாய நீர் தேங்கி நின்றது.

தொட்டிக்குள் இறங்கிய தில்வார் உசேன் பார்புயா திடீரென்று வி‌ஷ வாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். உடனே தொட்டியின் நுழைவு வாயில் வழியாக பார்த்த அன்வர் உசேன் பார்புயா, அன்வர் உசேன், அபிதூர் உசேன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். அவர்களும் மயங்கி விழுந்தார்கள். இதை பார்த்து மற்ற தொழிலாளர்கள் அலறினார்கள். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தில்வார் உசேன் பார்புயா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இது குறித்து வீரபாண்டி போலீசார், சலவை ஆலையின் உரிமையாளர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். இதை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், தொழிற்சாலை பாதுகாப்பு இணை இயக்குனர் ரமேஷ், மற்றும் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் சம்பவம் நடந்த சலவை ஆலையில் விசாரணை நடத்துவதற்காக நேற்று மாலை அங்கு வந்தனர். அங்கு ஆலையின் கதவு பூட்டு போடப்பட்டு இருந்தது.

சுமார் அரை மணி நேரம் அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். ஆலை உரிமையாளர் வராததால் பணியாளர்களின் உதவியுடன் ஆலையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விபத்து நடந்தது எப்படி? என்று விசாரித்தனர். தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் ஆலையை மேற்கொண்டு செயல்படுவதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து சாய, சலவை ஆலைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு ஆலையில் உள்ள அனைத்து எந்திரங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் ஆலை கதவுக்கும் சீல் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்