பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது, கர்நாடகத்தில் 61.73 சதவீத தேர்ச்சி - வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கர்நாடகம் 61.73 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை பெற்றனர்.

Update: 2019-04-15 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 18-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 1,013 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 653 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. 54 மையங்களில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் 22,746 பேர் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 7-ந் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 15-ந் தேதி (அதாவது நேற்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பி.யூ. கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர், பி.யூ. கல்வித்துறை இயக்குனர் ஷிகா ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர். அதன்பிறகு நண்பகல் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையதளங்களில் வெளியாகின. இன்று(செவ்வாய்க்கிழமை) மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் கல்லூரிகளில் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து உமாசங்கர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 653 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 587 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 61.73 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.17 சதவீத தேர்ச்சி அதிகமாகும்.

இதில் அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 66.58 சதவீதமாகவும், வணிகவியல் பாடப்பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 66.39 சதவீதமாகவும், கலை பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 50.53 சதவீதமாகவும் உள்ளது.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 55.29 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 68.24 ஆகவும் உள்ளது. மேலும் நகரங்களில் பயின்ற மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் கிராமப்புறங்களை ஒப்பிடும்போது குறைந்துள்ளது. நகரங்களில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 61.38 ஆகவும், கிராமங்களில் 62.88 ஆகவும் உள்ளது. கன்னட வழி மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ-மாணவிகளின் தேர்ச்சியை பார்க்கும்போது ஆங்கில வழி கல்வியில் பயின்றவர்கள் 66.90 சதவீதமும், கன்னட வழி கல்வியில் பயின்றவர்கள் 55.08 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்ச்சி அடைந்தவர்களில் 54,823 மாணவ-மாணவிகள் 85 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 301 மாணவ-மாணவிகளும், 2-ம் வகுப்பில் 80 ஆயிரத்து 357 மாணவ-மாணவிகளும், 3-வது வகுப்பில் 52 ஆயிரத்து 106 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 76.14 ஆகவும், காதுகேளாத மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 53.53 ஆகவும் உள்ளது. அரசு பி.யூ. கல்லூரிகளில் தேர்ச்சி 50.94 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 60.42 சதவீதமாகவும் இருக்கிறது. மாநகராட்சி பி.யூ. கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம் 57.68 ஆக உள்ளது.

மங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்த ஆல்விடா அன்சிலா டிசோசா என்ற மாணவியும், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சர்மா என்ற மாணவனும் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். இவர்கள் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்து பயின்றனர். இதேபோல், வணிகவியல் பாடப்பிரிவில் 594 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீரியா செனாய் என்ற மாணவி 2-வது இடம் பெற்றார். வணிகவியல் பாடப்பிரிவில் 594 மதிப்பெண்கள் பெற்று சுவாதிக் (புத்தூர்), கவுதம் ரதி (பெங்களூரு), பீமி ரெட்டி சந்தீப் ரெட்டி (பெங்களூரு), பிரனவ் சாஸ்திரி (பெங்களூரு) என்ற மாணவர்களும், வைஷ்ணவி (பெங்களூரு), பிரக்னா (துமகூரு) என்ற மாணவிகளும் 3-வது இடம் பிடித்தனர்.

கலை பாடப்பிரிவில் குசுமா உஜ்ஜினி (பல்லாரி) என்ற மாணவி 600-க்கு 594 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார். 591 மதிப்பெண்களுடன் ஒசமணி சந்திரப்பா (பல்லாரி), நாகராஜ் (பல்லாரி), ஒமிசா (பல்லாரி) ஆகிய மாணவர்கள் 2-ம் இடம் பிடித்தனர். 589 மதிப்பெண்கள் பெற்று சச்சின் (பல்லாரி), சுரேஷ் (பல்லாரி), பரிகரா சிவகுமார்(தாவணகெரே) ஆகியோர் 3-வது இடம் பிடித்தனர்.

அறிவியல் பாடப்பிரிவில் பெங்களூருவை சேர்ந்த ராஜத் காஸ்யப் என்ற மாணவன் 594 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார். திவ்யா (பெங்களூரு), பிரியா நாயக் (பெங்களூரு) ஆகியோர் 593 மதிப்பெண்களுடன் 2-வது இடமும், ராஈசா (உடுப்பி), ஜாக்ரதி (புத்தூர்), சுவாதி (உடுப்பி) மற்றும் நிகிதன் கவுடா (ஹாசன்) ஆகியோர் 592 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தனர்.

மறுத்தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்ச்சி அடைந்துள்ள மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களின் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல்கள் பெற நாளை(புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம். விடைத்தாள் நகல்களை மாணவ-மாணவிகள் வருகிற 27-ந் தேதி முதல் மே மாதம் 6-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு மாணவர்கள் 29-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்துக்கான விடைத்தாள் நகல் பெற ரூ.530 கட்டணமாகவும், ஒரு பாடத்துக்கான மறுக்கூட்டலுக்கு ரூ.1,670 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாட வாரியாக 100-க்கு 100 வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை

கன்னட மொழி பாடத்தில் 161 பேரும், சமஸ்கிருதத்தில் 852 பேரும், இந்தியில் 35 பேரும், வரலாறு பாடத்தில் 155 பேரும், பொருளாதார பாடத்தில் 303 பேரும், தர்க்கத்தில் 23 பேரும், சமூகவியல் பாடத்தில் 58 பேரும், உருதுவில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணக்குபதிவியல் பாடத்தில் 1,939 பேரும், உளவியலில் 19 பேரும், இயற்பியலில் 7 பேரும், வேதியியலில் 754 பேரும், கணிதத்தில் 2,447 பேரும் உயிரியலில் 128 பேரும், கனிணி அறிவியல் பாடத்தில் 1,546 பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 117 பேரும், மலையாளத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்