திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-04-16 22:30 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பெரியநாயகி, பிறவிமருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் நீலாத்பாலாம்பிகை, தியாகராஜர் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மன்னார்குடி செங்கமலதாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திவாகரன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் குமாரசாமி, திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், சங்க செயலாளர் அக்ரோ சீனிவாசன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவ தலைவர் விஸ்வநாதன், துணைத்தலைவர் சேகர், துணைச்செயலாளர் இளங்கோ, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவிடங்க தியாகேசா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கோவிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேவாரம் திருவாசகம் படிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இரவு 9 மணி அளவில் தேர் நிலைக்கு வந்தது. முன்னதாக கோவிலில் மங்களநாயகி அரங்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்