ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-16 22:30 GMT
சூலூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நேற்று மாலை முதல் தலைவர்கள் பிரசாரம் நிறைவடைந்து விட்டதால், இன்று (புதன்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்து மேல் பணம், நகைகள், துணிமணிகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர்- திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் நேற்று திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக கோவை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 41 லட்சம் இருந்தது.

இதை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்ப பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ரூ.1 கோடியே 41 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் சூலூர் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்