‘கழிவுநீரை மாற்று பாதையில் திருப்பாமல் கூவத்தை தூர்வாருவதில் பயனில்லை’ 2020-ம் ஆண்டு நீர் போக்குவரத்து தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்

பல்வேறு அரசுகள் நடவடிக்கை எடுத்தும் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கூவம் ஆற்றில் பாயும் கழிவுநீரை மாற்று பாதையில் திருப்பாமல் தூர்வாருவதில் பயனில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Update: 2019-04-17 22:30 GMT
சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம் சட்டரை என்னும் இடத்தில் உள்ள கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் ஓடியதால் இதற்கு அப்பெயர் வந்தது. மொத்தம் 72 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கூவம் ஆறு, பேரம்பாக்கம், மணவாள நகர் (திருவள்ளூர்), அரண்வாயல் குப்பம், பருத்திப்பட்டு (ஆவடி), கொரட்டூர் வழியாக அரும்பாக்கத்தில் நுழைகிறது. சென்னையில் அமைந்தகரை பாலம், ஸ்பர்டேங்க் பாலம், சிந்தாதிரிப்பேட்டை பாலங்களை கடந்து, இறுதியில் நேப்பியர் பாலம் வழியாக வங்க கடலில் கலக்கிறது.

கடந்த 1960-ம் ஆண்டு வரை சுத்தமாக இருந்த கூவம் ஆறு நீர்வழி போக்குவரத்திலும், வணிகத்திலும், மீன்பிடித் தொழிலிலும் முக்கிய பங்கு வகித்ததால் ‘தென்னிந்தியாவின் தேம்ஸ் நதி’ என்று அழைக்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வணிகம் நடந்து வந்தது. ரோமானியர்களும் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். நமது கலாசார புகழை தாங்கி நின்ற கூவம் ஆறு, சென்னை மாநகரின் திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் துர்நாற்றம் எடுக்கும் ஆறாகவும் மாறியது. இதனால், கூவம் அடுத்து வந்த ஆண்டுகளில் படுவேகமாக மாசடைந்ததுடன், நிரந்தரமாய் உருமாறிப்போனது. அதைச் சீரமைக்க பல்வேறு அரசுகள், திட்டங்களை தீட்டினாலும், கொஞ்சம் சிரமமான விஷயம் என்பதால் கைகூடாமல் இருந்து வந்தது. சுத்தமான கூவம் என்பது சென்னை வாசிகளின் கனவாகவே இருந்து வந்தது.

சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை (சி.ஆர்.ஆர்.டி.) என்ற அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி கூவத்தை சுத்தப்படுத்த மீண்டும் தீவிர முயற்சிகளை தொடங்கியது. குறிப்பாக கடந்த 2014-2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ.1,934 கோடியே 84 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.604 கோடியே 77 லட்சத்துக்கான நிர்வாக அனுமதியை 2015-ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியது. 2015-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இத்திட்டத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து ஆவடி அருகில் உள்ள பருத்திப்பட்டு அணையில் இருந்து சேத்துப்பட்டு ரெயில் நிலைய பாலம் வரையில் முதல் கட்டமாகவும், பின்னர் அங்கிருந்து நேப்பியர் பாலம் வரை 2-வது கட்டமாகவும் 32 கிலோ மீட்டர் நீளத்துக்கு கூவத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

கூவத்தில் 60 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, திடக்கழிவு மேலாண்மை, கரையோரங்களை அழகுபடுத்துதல் மற்றும் மீன் உள்ளிட்டவை வாழ்வதற்கேற்ப சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவை இணைந்து இந்த பணியை செயல்படுத்தி வருகின்றன. தற்போது மாநகரில் பெரும்பாலான இடங்களில் கூவம் ஆறு தூர்வாரப்பட்டு உள்ளது. மறுபுறம் மாநகரில் உள்ள வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களும் கூவத்தில் அதிக அளவில் கலக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கூவம் ஆற்றில் நடந்து வரும் முதல் கட்டப்பணியில் 90 சதவீதமும், 2-வது கட்டத்தில் 50 சதவீத பணிகளும் முடிந்து உள்ளன. 2020-ம் ஆண்டு இறுதிக்குள் முழு அளவில் பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதற்கு பிறகு கூவம் ஆற்றங்கரைகளில் பூங்கா, நடைபயிற்சி தளம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. 2020-ம் ஆண்டு நீர் போக்குவரத்து தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன. அத்துடன் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கூவம் செல்லும் வழிகளில் அமைந்துள்ள 30 ஏரிகளுக்கு, இந்த ஆற்றில் இருந்து நீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்திலும் நிதி ஒதுக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் அப்போது நிறைவேற்ற முடியாமல் போனது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘சென்னை வாசிகளின் கனவு திட்டமான கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியில் பல்வேறு அரசுகள் கடந்த 20 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும், பணிகளை தொடங்கி வைத்தும் அவை தற்போது வரை முழுமை பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக கூவம் ஆற்றில் அதன் தொடக்கத்தில் இருந்து பள்ளிப்பட்டு ஓடை, அயனம்பாக்கம் உபரிநீர், ஆலப்பாக்கம் உபரிநீர், நொளம்பூர் கால்வாய், அம்பத்தூர் சிட்கோ கால்வாய், பாடிக்குப்பம் கால்வாய், விருகம்பாக்கம் ஓடையின் உபரிநீர், விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் ஆகியவை இணைகின்றன.

இவற்றின் மூலம் கூவத்தில் இணையும் நீர், அதன் தன்மை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கூவம் தூர்வாரும் பணி ஒரு புறம் நடந்து வந்தாலும், மறுபுறம் கூவத்தில் கலக்கும் கழிவுநீர் கலப்பதும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் பாதைகளை வேறு வழியில் திருப்புவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும். மேலும், கூவத்துடன் தொடர்புடைய அனைத்து நீராதாரங்களின் தன்மை, அவற்றின் அளவு உள்ளிட்ட தகவல்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. இதனை செய்யாமல் கூவத்தை தூர்வாருவதில் பயனில்லை.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்