மலை கிராமத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தலை மீது சுமந்து சென்ற ஊழியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு எந்திரங்களை தலை மீது 5 கி.மீ. தூரம் ஊழியர்கள் சுமந்து சென்றனர்.

Update: 2019-04-17 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சியில் உள்ளது ஏக்கல்நத்தம் என்ற மலை கிராமம். இங்கு மொத்தம் 463 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி யாரும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யாமல் புறக்கணித்தனர்.

பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள் அந்த கிராம மக்களை சந்தித்து அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை போன்றவற்றை செய்து கொடுப்போம் என உறுதி அளித்தனர். இதையடுத்து சென்ற சட்டமன்ற தேர்தலில் அங்கு வாக்குப்பதிவு நடந்தது.

ஆனால் வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி அளிக்காததால் இன்று வரை இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் இங்கு மீண்டும் ஓட்டு போடுவதில்லை என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதையறிந்த அரசு அலுவலர்கள், அந்த கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் மலைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் சின்னசக்கனாவூர் என்ற கிராமம் வரை இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் என 2 செட் எந்திரங்களை நேற்று எடுத்து சென்ற அலுவலர்கள், அங்கிருந்து தலை மீது வாக்குப்பதிவு எந்திரங்களை சுமந்தவாறு 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

இதில் மண்டல அலுவலர் ஸ்ரீதர், உதவி மண்டல அலுவலர் பிரான்சிஸ், தேர்தல் அலுவலர் வெங்கடேசன், உதவி அலுவலர்கள் மகேந்திரன், கோபாலன், விஜயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரகீம், உள்பட மொத்தம் 10 பேர் நேற்று மாலை 4 மணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்