பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அட்டைகளை சாலையில் வீசி எறிந்த மக்கள்

அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில், பெரம்பூர், ராயபுரம், பட்டாளம், துறைமுகம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர்.

Update: 2019-04-18 23:25 GMT
சென்னை,

சென்னை பேசின் பிரிட்ஜ் சாலையில் சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில், பெரம்பூர், ராயபுரம், பட்டாளம், துறைமுகம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர்.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளுடன் வந்த அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அலுவலகத்துக்குள் விடாமல் தடுத்தனர்.

அப்போது, அந்த இளைஞர்கள் எங்களுடைய பெயர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை? எங்களது ஓட்டுரிமை ஏன் பறிக்கப்படுகிறது? இவற்றிற்கு பதில் அளிப்பதுடன், உடனடியாக எங்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கு போலீசார் அலுவலகத்தின் உள்ளே அதிகாரிகள் யாரும் இல்லை. இப்போது, நீங்கள் யாரையும் சந்திக்க முடியாது என்று பதில் அளித்தனர்.

இதனால், ஆவேசம் அடைந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை சாலையில் விசிறி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் இளைஞர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதே போன்று புரசைவாக்கம் பகுதியிலும் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்