பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு மாநில அளவில் ஈரோடு 2-வது இடம் 95.23 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதத்தை பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தது.

Update: 2019-04-19 23:15 GMT
ஈரோடு, 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது.

அடுத்ததாக ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 490 மாணவர்களும், 12 ஆயிரத்து 826 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 316 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள். இதில் 10 ஆயிரத்து 847 மாணவர்களும், 12 ஆயிரத்து 308 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் 94.4 சதவீத மாணவர்களும், 95.96 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருந்தனர். மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் அதிகமாக உள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்விலும் தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் 96.35 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த ஆண்டும் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தை தக்க வைத்து உள்ளது.

மேலும் செய்திகள்