நவிமும்பை பகுதியில் இயக்கப்படும் மின்சார ரெயிலுக்கு அதிக கட்டணம் பயணிகள் குற்றச்சாட்டு

நவிமும்பை பகுதியில் இயக்கப்படும் மின்சார ரெயிலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2019-04-19 22:30 GMT
மும்பை, 

நவிமும்பை பகுதியில் இயக்கப்படும் மின்சார ரெயிலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதிக கட்டணம்

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக விளங்கி வருகிறது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் மத்திய ரெயில்வே சார்பில் மெயின், துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதில், துறைமுக வழித்தடத்தில் வாஷி- பன்வெல், தானே- பன்வெல் இடையே இயக்கப்படும் ரெயில்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து பன்வெலை சேர்ந்த பயணி ஹரி(வயது72) கூறுகையில், ‘‘மெயின் வழித்தடத்தில் 50 கி.மீ. தூரமுள்ள சி.எஸ்.எம்.டி.- கல்யாண் இடையே பயணம் செய்ய ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் துறைமுக வழித்தடத்தில் தானே- வாஷி இடையே 20 கி.மீ.க்கு டிக்கெட் கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. இது எப்படி நியாயம். உடனடியாக ரெயில்வே நிர்வாகம் எல்லா பகுதிகளுக்கும் ஒரே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்’’, என்றார்.

அதிகாரி விளக்கம்

இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரெயில்வே நிர்வாகம் நவிமும்பையில் ரெயில்களை இயக்க சிட்கோவிற்கு அதிக வரி செலுத்த வேண்டி உள்ளது.

அந்த வரி தான் டிக்கெட் கட்டணத்துடன் வசூலிக்கப்படுகிறது, என்றார்.

மேலும் செய்திகள்