நாகர்கோவிலில் துணிகரம்: கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

நாகர்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.23 ஆயிரம் மற்றும் லேப்டாப்பை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-04-20 22:15 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி பூங்குளத்துவிளை பகுதியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். முத்து கிருஷ்ணன் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வருவது வழக்கம். நேற்று இரவு முத்து கிருஷ்ணன் தனது காரில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதற்காக காரை ஆஸ்பத்திரியின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய முத்து கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் காரின் பின் இருக்கையில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றையும் காணவில்லை. முத்து கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்குள் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து திருடியது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் பற்றி முத்து கிருஷ்ணன் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில் கோர்ட்டு ரோடு நகரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். பகலிலும், இரவிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசலும், ஆள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில், காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் துணிகர திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்