பயந்தர் நிலையத்தில் ரெயிலை நிறுத்த மறந்த மோட்டார் மேன், கார்டு பணி இடைநீக்கம் ரெயில்வே நடவடிக்கை

பயந்தர் நிலையத்தில் ரெயிலை நிறுத்த மறந்த மோட்டார் மேன், கார்டை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே உத்தரவிட்டது.

Update: 2019-04-20 22:30 GMT
மும்பை,

பயந்தர் நிலையத்தில் ரெயிலை நிறுத்த மறந்த மோட்டார் மேன், கார்டை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே உத்தரவிட்டது.

விரைவு மின்சார ரெயில்

மும்பை மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட் - விரார் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில்கள் மும்பை சென்டிரல், தாதர், பாந்திரா, அந்தேரி, போரிவிலி, பயந்தர், வசாய் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நேற்று முன்தினம் சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இருந்து விராருக்கு விரைவு மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலை இயக்கும் பணியில் மோட்டார் மேன் சசி புஷன், கார்டு வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

பணி இடைநீக்கம்

போரிவிலியை தாண்டி பயந்தர் ரெயில் நிலையம் வந்த போது மோட்டார் மேன், கார்டு 2 பேரும் உரிய நேரத்தில் பிரேக்கை அழுத்த மறந்தனர். இதனால் மின்சார ரெயில், ரெயில் நிலையத்தை தாண்டி போய் நின்றது. ரெயிலின் 9 பெட்டிகள் பிளாட்பாரத்தின் வெளியில் நின்றன. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்த மோட்டார் மேன் மற்றும் கார்டை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்