இழப்பீடு தொகை வழங்காததால் உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்ற கோர்ட்டு ஊழியர்கள் ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-22 22:45 GMT
சிப்காட்( ராணிப்பேட்டை), 

சிப்காட்டை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62). ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அமைவதற்காக கடந்த 1981-ம் ஆண்டு பலரிடம் இருந்த நிலங்களை வருவாய்த்துறை கையகப்படுத்தியது. அப்போது ஆனந்தனின் 1½ ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆனந்தனுக்கு சேர வேண்டிய ஒரு பகுதி தொகையினை வருவாய்த்துறையினர் தரவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆனந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆனந்தனுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 401-ஐ நிலத்திற்கு இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என அரக்கோணம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அரக்கோணம் சார்பு நீதிமன்ற உத்தரவுப்படி கோர்ட்டு ஊழியர்கள், மனுதாரரின் வக்கீல் வெங்கடேசன், மனுதாரர் ஆனந்தன் ஆகியோர் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்திருந்தனர்.

அப்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து நேற்று ஜப்தி செய்யப்படவில்லை.

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்