கோவையில் பரபரப்பு, அந்தோணியார் சொரூபம் மீது கல்வீச்சு - போலீஸ் விசாரணை

கோவையில் அந்தோணியார் சொரூபம் மீது கல்வீசியதால், கண்ணாடிக்கூண்டு உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-04-22 22:30 GMT
துடியலூர்,

கோவை கண்ணப்பநகர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜேசுரத்தினம் (வயது 65). இவருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் தரை தளத்தில் கண்ணாடி கூண்டுக்குள் அந்தோணியார் சொரூபமும், முதல் மாடியில் ஏசு கிறிஸ்து சொரூபமும், 2-வது மாடியில் மாதா சொரூபமும், வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கு வந்து பலர் பிரார்த்தனை செய்வதுண்டு.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தரை தளத்தில் உள்ள அந்தோணியார் சொரூபம் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் சொரூபம் இருந்த கண்ணாடி கூண்டு, மற்றும் விளக்குகள் உடைந்தன. அந்த சத்தம் கேட்டு ஜேசுரத்தினம் மற்றும் பொதுமக்கள் வணிக வளாகம் முன்பு திரண்டனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதேபோல் ஏசு கிறிஸ்து மற்றும் மாதா சொரூபங்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்த நிலையில் அந்த நபர்கள் தான், வணிகவளாகத்தில் இருந்த அந்தோணியார் சொரூபம் இருந்த கண்ணாடி கூண்டு மீதும் கல்வீசி இருப்பார்களா? என்பதுஉள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்