கைதான 6 பேர் சிறையில் அடைப்பு ‘தொழில் போட்டி காரணமாக கொன்றேன்’ - கைதான ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வாக்குமூலம்

‘தொழில் போட்டி காரணமாக ஒர்க்‌ஷாப் அதிபரை கொன்றேன்’ என்று கைதான மற்றொரு ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-04-22 22:45 GMT
போத்தனூர்,

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 37). இவர் செட்டிப்பாளையம் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்ததோடு ஒர்க்‌ஷாப்பும் நடத்தி வந்தார். இவர், கடந்த 18-ந் தேதி மர்ம ஆசாமிகளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். ஒர்க்‌ஷாப் அதிபர் கொலை வழக்கில் 15 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து, கோவை பீளமேட்டை சேர்ந்த முத்துரவி என்ற வியாசர்பாடி ரவி (36), அவரு டைய உறவினர்களான மருதுபாண்டி (37), திருப்பூரை சேர்ந்த நவீன்(35) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான ரவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து பீளமேடு பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறேன். பழைய உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தேன். எனக்கு தொழில் ரீதியாக பரந்தாமன் அறிமுகமானார். என்னிடம் இருந்து தொழில் நுணுக்கங் களை தெரிந்து கொண்ட அவர் நாளடைவில் எனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரை தொடர்பு கொண்டு பேசி அவரது வாடிக்கையாளராக மாற்றினார். இதனால் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். வருமானமும் அதிகரித்தது. என்னுடைய தொழில் முடங்கியது.இது தொடர்பாக எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பரந்தாமன் தகாத வார்த்தைகள் பேசியதோடு என்னை மிரட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொழில் போட்டியில் எனது தொழிலை முடக்கியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் உதவியை நாடினேன். அவர் தனது நண்பர்களான கூலிப்படை யை சேர்ந்த கார்த்திக், லோகேஸ்வரன், டேவிட் ஆகியோரை வரவழைத்து பரந்தாமனை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டோம். போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைதான ரவி, மருதுபாண்டி, நவீன் ஆகியோரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 3 அரிவாள்கள், 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ரவி அளித்த தகவலின் பேரில் கூலிப்படையை சேர்ந்த கும்பகோணம் கார்த்திக், சென்னை லோகேஸ்வரன், பெரம்பலூர் டேவிட் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 6 பேரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் உள்பட மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்