கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க கோரி மனு கொடுத்தனர்

கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க கோரி மனு கொடுத்தனர்.

Update: 2019-04-22 21:30 GMT
நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18-ந் தேதி முடிவடைந்தது. அதனால் நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர்.

பாளையங்கோட்டை யூனியன் உடையார்குளம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் குடிநீர் வசதி கிடையாது. ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதுபற்றி பலமுறை யூனியன் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பகுதி ஆற்றுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். அந்த தண்ணீரும் கலங்கலாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எங்கள் ஊருக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் வைகுண்டராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “ஆலங்குளம் 24 மணி நேரமும் இயங்கி கொண்டு இருக்கும் தூங்கா நகரம் ஆகும். இரவு பணியில் ஈடுபட்டு வரும் கூலி தொழிலாளர்களுக்காக இரவு நேரத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள் இரவு 11.30 மணி வரை திறந்து வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அரசாணையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் கடைகளை திறந்து வைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என கூறி வருகின்றனர். எனவே இரவு நேரத்தில் கடையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்