சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.;

Update:2019-04-23 04:00 IST
சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த கனகராஜ் கடந்த மார்ச் 21-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது (வயது 60). இவர் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்ய நேற்று கோமாளி வேடம் அணிந்து சூலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் அலுவலக படிக்கட்டு மற்றும் தரையில் தவழ்ந்தவாறு சென்றார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் திருவாரூர், ஆர்.கே.நகர், மதுரை மேற்கு, திருமங்கலம், சாத்தான்குளம், திருச்சி உள்பட 31 சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எல்.கதிரேசன் (46). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவர் கள் இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நேற்று தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் மனுதாக்கல் செய்தார்.

இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். இதையடுத்து இவர் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் போன்ற சட்டமன்ற தேர்தலிலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு உள்ளார். தேர்தலில் செலவு செய்வதற்காக தனது வீட்டை விற்பனை செய்துவிட்டு சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளான நேற்று 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்